மிர்ப்பூர், ஜூலை 18:  இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. வரும் 26-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை கொழும்புவில் நடைபெறும் இந்த தொடருக்கான வங்கதேச கிரிக்கெட் அணி நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. நடந்துமுடிந்த உலகக்கோப்பையில் 606 ரன்கள் அடித்து 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் இதில் இடம்பெறவில்லை. புனித பயணம் செல்வதால் இந்த தொடரில் இருந்து அவர் விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ்-க்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவரும் அணியில் இடம்பெறவில்லை. மேலும், உலகக்கோப்பையில் இடம் பிடித்த அபு ஜெயத் நீக்கப்பட்டு உள்ளார். இடது கை பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் மற்றும் அனாமுல் ஹக் ஆகியோர் நீண்ட நாள்களுக்கு பிறகு களமிங்கி உள்ளனர். கேப்டனாக மோர்தசா தொடருகிறார்.