ஸ்டாலின் கோரிக்கை அரசு பரிசீலிக்கும்

சென்னை

சென்னை, ஜூலை 18: அரக்கோணம் தொகுதி கல்லாற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது அரக்கோணம் தொகுதி எம்எல்ஏ ரவி பேசுகையில்: அரக்கோணம் தொகுதி நெமிலி ஒன்றியம், சம்பத்துராயன் பேட்டை இலுப்பை தண்டலம் பகுதி விவசாயிகள், நெசவாளிகள், மாணவர்கள் அதிக உள்ள பகுதி, இப்பகுதி மக்கள் காஞ்சிபுரம், சென்னை செல்லவேண்டும் என்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. ஆகவே இந்த பகுதியில் கல்லாற்றில் பிள்ளையார் கோயில் அருகில் உயர்மட்ட பாலம் இந்தாண்டு அரசு அமைத்து தர வேண்டும்.

மேலும் அனந்தபுரம் உள்ளிட்ட எனது தொகுதியில் உள்ள ஊராட்சி சாலைகளை நெடுஞ்சாலைதுறைக்கு மாற்றம் செய்ய அரசு முன்வரவேண்டும் என்றார். அமைச்சர் வேலுமணி: இலுப்பை தண்டலம், கல்லாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க 4 கோடி ரூபாய் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

நபார்டு திட்டத்தின் கீழ் இந்த பணி இந்தாண்டு முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே போன்று 7000 கி.மீ ஊரக சாலைகள் நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் உறுப்பினர் குறிப்பிட்டுள்ள சாலைகளும் நெடுஞ்சாலை துறைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்: எனது தொகுதிகுட்பட்ட கொளத்தூர் அவ்வையார் சாலை, ஐசிஎப் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சி ரயில்வே துறைக்கு 10 கோடியே 70 லட்சம் நிதி அளிக்க வேண்டியுள்ளது.

அதனை விரைந்து வழங்கி, அதன் படி ரயில்வே மேம்பாலம் அமைக்க மின்துறை, பொதுப்பணிதுறை உள்ளிட்ட துறைகள் மூலம் நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ஆகவே துறைகளை இணைத்து ஒருங்கிணைப்பு குழு அமைத்து, இப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். என்றார்.

இதற்கு அமைச்சர் வேலுமணி: உறுப்பினர் குறிப்பிட்டுள்ள கோரிக்கை ஏற்று குழு அமைக்க முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். என்றார்.