அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமான விஜய் தேவரகொண்டா நோட்டா படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து அவர் ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கீத கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னை வந்த விஜய் தேவாரகொண்டா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- இந்த படத்தில் மாணவர் தலைவனாக நடிக்கிறேன். இருப்பினும் இதில் அரசியலோ, அரசியல் வசனங்களோ இருக்காது. ஒவ்வொருவரும் கேள்வி கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும். நோட்டா படத்திற்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நான் நடிக்கவில்லை.
ஏனென்றால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. நல்ல கதை என்றாலும், சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதற்கு மொழி ஒரு காரணமாக இருக்குமென நான் உணருகிறேன். இன்னும் கொஞ்சம் ஆழமாக தமிழ்மொழியை கற்றுக்கொண்டு நேரடி தமிழ் படத்தில் நிச்சயம் நடிப்பேன்.
இந்த படத்திலும் நான் தமிழில் டப்பிங் பேசவில்லை. ராஷ்மிகா மந்தனாவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில் தமிழில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்தேன். தியாகராஜா குமாரராஜா அற்புதமாக இயக்கி இருந்தார். அதிலும் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து அசந்து விட்டேன்.
ஒரு ஆண்டுக்கு 8 படங்களில் நடிக்கிறார். அதுவும் விதவிதமான கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரிடம் சினிமாவை பற்றி கற்றுக்கொள்வேன். விஜய்சேதுபதி போல் ஒரு அற்புதமான நடிகரை நான் சந்தித்தது இல்லை. இவ்வாறு விஜய்தேவாரகொண்டா பேட்டி அளித்தார்.