சென்னை, ஜூலை 18: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தேசத்துரோக வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனைய நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு வைகோ பேசிய போது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 5-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த உத்தரவில், வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிப்பதாக உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வைகோ இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய விரும்புவதாக தெரிவித்ததால் அவருக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. விசாரணையின் போது வைகோவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இனிமேல் பொது வெளிகளில் இதுபோன்று பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மேல்முறையீடு குறித்து சென்னை ஆயிரம்விளக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பேசக்கூடாது என்று அறிவுரையுடன் ஐகோர்ட் தீர்ப்பை வழங்கியது. தேசதுரோக வழக்கில் மேல்முறையீட்டு விசாரணை நிறைவடையும் வரையில் அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை மற்றும் அபராதத் தொகை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.