வாஷிங்டன், ஜூன் 18:  சிறுநீரக செயலிழப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் நோக்கில் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவக்குழுவால் செயற்கை சிறுநீரகம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களை அச்சுறுத்தி வரும் மிக முக்கியமான பாதிப்பாக, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளது இப்பிரச்சனை இருப்பவர்களில் 20% பேர் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறுநீரகப் பாதிப்பில் மிகமுக்கியமானது சிறுநீரக செயலிழப்பு. அதற்கான நிரந்தரத் தீர்வாக செயற்கை சிறுநீரகங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த முயற்சியில் அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் உருவாக்கும் சிறுநீரகம், அனைத்து நாட்டினருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் பணிகளைத் தொடங்கினோம். அதாவது, `யுனிவர்சல் கிட்னி’ தான் எங்கள் நோக்கம். அதிலும் இப்போது வெற்றிகண்டுவிட்டோம். செல்போன் டெக்னாலஜி மற்றும் பிளாஸ்டிக் மூலமாக இந்தச் சிறுநீரகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை சிறுநீரகம் வரும் ஆண்டில் மனிதர்களுக்குப் பொருத்தப்பட்டு அதன் திறன் முழுவதுமாக ஆராயப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தச் செயற்கை சிறுநீரகம் மருத்துவ உலகின் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும், என்றனர்.