காஞ்சிபுரம், ஜூலை 18: காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க நின்ற கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதால் ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

18-வது நாளான இன்று அத்திவரதருக்கு கத்தரிப்பூ நிற பட்டால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அத்திவரதரை தரிசிக்க அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டுள்ளனர். கோவில் உட்பிரகாரம், 4 மாட வீதிகள், செட்டித்தெரு, அண்ணா தெரு ஆகிய வீதிகளை கடந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வரிசையில் நின்றபோது பக்தர்கள் அதிகம் பேர் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கிய 3 பக்தர்களுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜன், கங்காலட்சுமி, நாராயணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.