சென்னை, ஜூலை 19: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்றும், அதனால் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது மதுக்கடைகளை எதிர்த்து போராடிய நந்தினி என்ற பெண்ணை கைது செய்து, திருமணம் கூட செய்ய விடாமல் தடுத்தது மனிதாபிமானமற்ற செயல். அவருக்கு 5-ம் தேதி நடைபெற வேண்டிய திருமணம் தடைபட்டது என்று கூறினார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: நந்தினியை காவல்துறை கைது செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி தான் காவல்துறை செயல்பட்டது. அவருக்கு திருமணம் நடைபெறவில்லை என்று கூறியது தவறு. அவர் ஜாமீனில் வெளியே வந்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஐ.பெரியசாமி: அதிமுக அரசு ஆட்சியில் தான் சிலை திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றீர்கள். ஆனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலை செயல்பட விடாமல் தடுக்கும் பணியில் தான் தமிழக அரசு ஈடுபடுகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள நடராஜர் சிலையை வாங்கக்கூட முடியவில்லை.

முதலமைச்சர்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு உரிய உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அவர் கேட்ட அனைத்து அதிகாரிகளும் அளிக்கப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்பட அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.
ஐ.பெரியசாமி: காவல்துறையில் க்யூ பிராஞ்ச் பிரிவு ஒன்று உள்ளது. அது மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடவில்லை. மாறாக, சமூக போராளிகள், பொதுநல ஆர்வலர்களை கண்காணிக்கும் வேலையைத் தான் செய்து வருகிறது.

தமிழகத்தில¢ அல்கொய்தாவின் துணை அமைப்பான ஒரு தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருவது பற்றி துபாயில் இருந்து தகவல் வருகிறது. தீவிரவாத செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற இயக்கங்களை கண்டுபிடித்து மக்களை காப்பாற்றும் பணியில் க்யூ பிராஞ்ச் ஈடுபடவில்லை.

முதலமைச்சர்: இங்கு சட்டத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. யாராக இருந்தாலும் அவர்கள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. எல்லா ஆட்சியிலும் தவறுகள் நடப்பது சகஜம்தான். ஆனால் காவல்துறை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறந்த காவல்துறைக்கான விருதை தமிழக காவல்துறை பெற்றுள்ளது. தனி நபர்கள் செய்யும் தவறுகளுக்கு காவல்துறையை பொறுப்பாக்க முடியாது.  உங்களுடைய ஆட்சியில் இருந்த அதிகாரிகள் தான் இப்போதும் இருக்கிறார்கள். அதே அதிகாரிகளை வைத்துதான் நாங்களும் ஆட்சி நடத்துகிறோம். எனவே மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என யாரும் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு முதலமைச்சர் பதிலளித்தார்.

தொடர்ந்து ஐ.பெரியசாமி பேச முற்பட்டார். ஆனால் அவருக்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. 45 நிமிடம் பெரியசாமி பேசிவிட்டதாக கூறி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை பேச சபாநாயகர் அழைத்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷமிட்டனர். ஐ.பெரியசாமிக்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை என தெரிவித்தனர். திமுக உறுப்பினர்களின் இந்த செயலை சபாநாயகர் கண்டித்தார். நீங்கள் பேசும்போது அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டால் அதை ஏற்றுக்கொள்வீர்களா என்று கேட்டார். இத்தகைய நடைமுறையை ஏற்க முடியாது என்று சபாநாயகர் கூறினார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.