வேலூர், ஜூலை 19: வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கட்சி உறுப்பினருக்கான கடிதம் கொடுக்கவில்லை என்பதாலும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாலும் இருவரது வேட்புமனுக்களும் மாலை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள வேலூர் மக்களவை தொகுதியில் நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. இன்று மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்பட உள்ளன. மனுக்களை வாபஸ்பெற 22-ம் தேதி கடைசி நாளாகும்.

அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் முதல் நாளிலேயே மனுதாக்கல் செய்தார்.தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி மனுதாக்கல் செய்துள்ளார்.வேலூர் தொகுதியில் போட்டியிட நேற்று முன்தினம் வரை 30 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

கடைசி நாளான நேற்று 16 பேர் மனு தாக்கல் செய்தனர். இன்று காலை 10 மணிக்கு வேட்புமனுக்கள¢ பரிசீலனை தொடங்கியது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சண்முகசுந்தரம் முன்னிலையில் ஒவ்வொரு மனுக்களாக பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. ஏ.சி.சண்முகம் வேட்பு மனு பரிசீலனையின் போது திமுக தரப்பில் அவர் புதிய நீதிகட்சியின் தலைவர் என்றும் இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட இருப்பதால் அதிமுகவில் சேர்ந்து விட்டாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் என்பதற்கான கடிதம் இருக்கிறதா என்றும் கேட்டனர்.

இதையடுத்து மதியத்திற்குள் அதற்கான கடிதம் கொடுக்க இருப்பதாக ஏ.சி.சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுவரை அவரது மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டது. தேவையான ஆதாரங்களை கொடுத்த பிறகு ஏ.சி.சண்முகம் மனு ஏற்கப்பட்டது.  இதே போல் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் மனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது ரூ.11.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரத்தை காட்சே என்பவர் எழுப்பினார்.

மேலும் அவர் மீது கடந்த தேர்தலின் போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மனுவை நிராகரிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டது. இதற்கு அவகாசம் தேவைப்படுவதால் அவரது வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திமுக வழக்கறிஞர்கள், தேர்தல் அதிகாரியிடம் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். பின்னர் அவரது மனுவும் ஏற்கப்பட்டது.  22-ந் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.