‘ராஜகோபால் ஒருநாள்கூட சிறையில் இல்லையே’

TOP-3 சென்னை

சென்னை, ஜூலை 19: எனது கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டர் அதிபர் ராஜகோபால், ஒருநாள் கூட சிறை தண்டனை அனுபவிக்கவில்லை என்பது என் மனதில் ஆறாத வடுவாக உள்ளது என்று ஜீவஜோதி வருத்தம் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் பிரின்ஸ் சாந்தகுமாரை உயிருக்கு உயிராக நேசித்து திருமணம் செய்தேன். அவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். ஆனால் சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் என்னை மூன்றாவது திருமணம் செய்ய விரும்பி பல தொல்லைகள் கொடுத்தார்.

அதையும் மீறித்தான் நான் என் கணவருடன் வாழ்ந்து வந்தேன். ஆனால் ராஜகோபால் அடியாட்களை அனுப்பி என் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கடத்தி மலை அடிவாரத்தில் வைத்து கொன்றுவிட்டார். சிறுவயதிலேயே எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பால் (கணவனை இழந்தது) அதிர்ச்சி அடைந்தேன். இதனால் ராஜகோபாலுக்கு எதிராக புகார் அளித்தேன். பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நீதிமன்றத்தால் ராஜகோபால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார்.
ஆனால் ராஜகோபால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

என்னுடைய நியாயமான போராட்டத்தால் உச்சநீதிமன்றம் ராஜகோபாலின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. அந்த நாளை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.
ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உயிரிழந்தது ஒரு வகையில் வருத்தமாக இருந்தாலும், அவர் ஒரு நாள் கூட சிறைக்கு செல்லாமல் உயிரிழந்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இதனால் என் கணவர் ஆத்மா சாந்தியடையாது. எனக்கு இது ஆறாத வடுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.