சச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருது

TOP-4 உலகம்

லண்டன், ஜூலை 19: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஐசிசி ‘ஹால் ஆஃப் ஃபேம்‘ விருது வழங்கி கௌரவித்துள்ளது.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்ரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த விருதை ஏற்கனவே சுனில் கவாஸ்கர், பிஷன் சிங் பேடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் பெற்றுள்ளனர். சச்சின் டெண்டுல்கர் தற்போது ஆறாவது வீரராக இந்த விருதை பெற்றுள்ளார். ‘ஐசிசி கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்படுவது ஒரு மரியாதை, இது தலைமுறை தலைமுறையாக கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பை மதிக்கிறது. நான்அதற்கான முயற்சியில் சிறிதளவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பாராட்டியதற்காக ஐசிசி-க்கு நான் நன்றி கூறுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெஸ்டில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் எடுத்தார், இது தொடர்ந்து சாதனைகளாகவே உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடித்த ஒரே மனிதர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் மனிதர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.