மலேசியாவில் உள்ள மிகப்பெரிய கட்டிடத்தில் இருந்து விக்ரம் குதித்து தப்பித்து ஓடுகிறார். அவரை இரண்டு பேர் துரத்துகின்றனர். அப்போது வேகமாக வரும் பைக் விக்ரம் மீது மோதுகிறது. இதில் படுகாயமடையம் விக்ரம் போலீஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு அபிஹாசன் இரவு பணி மருத்துவராக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து வீட்டிற்கு வரும் அபிஹாசன் தனது நிறைமாத கர்ப்பிணியான அக்ஷராஹாசனுடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது ஒரு கும்பல் அபிஹாசனை தாக்கி விட்டு அக்ஷராஹாசனை கடத்தி விடுகிறது. அதன்பிறகு அபிஹாசனனை தொடர்புகொள்ளும் அந்த கும்பல் விக்ரமை மருத்துவமனையில் இருந்து அழைத்து வரவேண்டும் என நிபந்தனை விதிக்கிறது. மருத்துவமனையில் உள்ள போலீஸ் பாதுகாப்பையும் மீறி விக்ரமை அபிஹாசன் வெளியே அழைத்து வருகிறார். இதனிடையே இந்த வழக்கை விசாரணை செய்யும் பெண் போலீஸ் அதிகாரிக்கும் மற்றொரு உயர் அதிகாரியான வின்சென்டிற்கும் அதிகார மோதல் ஏற்படுகிறது.

வின்சென்ட் மலேசியாவில் உள்ள மிகப்பெரிய தொழில் அதிபர்களை மிரட்டி பணம் சம்பாதிப்பதோடு தனது பதவியையும் தவறாக பயன்படுத்தி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையிலான போலீசாரும் விக்ரமை தேடுகின்றனர். பெண் போலீஸ் அதிகாரி தலைமையிலான போலீசாரும் அபிஹாசனையும், விக்ரமையும் தேடுகின்றனர். இதனிடையே விக்ரம் பற்றிய தகவலை பெண் போலீஸ் அதிகாரியிடம் அபிஹாசன் கூறிவிடுகிறார். அதேபோல் விக்ரம் தங்கி உள்ள வீட்டை கண்டுப்பிடித்த வின்சென்ட் அங்கு வந்து விக்ரமையும், அபியையும் கைது செய்கிறார். அப்போது அங்கு வரும் அந்த பெண் போலீஸ் அதிகாரி அபியை காப்பாற்ற நினைக்கிறார். திடீரென வின்சென்ட் பெண் போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்று விடுகிறார். இதைபார்த்த விக்ரமும், அபிஹாசனும் அங்கிருந்து தப்பி விடுகிறார். பெண் போலீஸ் அதிகாரியை சுட்டு விட்டு இருவரும் தப்பி விட்டதாக வின்சென்ட் தெரிவிக்கிறார். இதனால் அவர்களை போலீஸ் துரத்துகிறது. இறுதியில் போலீஸ் பிடியில் விக்ரம், அபிஹாசன் சிக்கினார்களா? எதற்காக விக்ரமை மற்றொரு கும்பல் தேடியது? பெண் போலீஸ் அதிகாரியை வின்சென்ட் சுடக்காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கே.கே. என்ற கதாபாத்திரத்தில் மிகவும் கச்சிதமாக பொருந்தி உள்ளார் விக்ரம். தனது உடல் மற்றும் கெட்டப்பை மிகவும் வித்தியாசமாக மாற்றி நடித்துள்ளார். மலேசியாவின் மிகப்பெரிய திருடன் போல் காட்டிக்கொள்வதற்காக அப்படி கெட்டப்பை உருவாக்கி உள்ளார். அதிக வசனம் பேசாமல் தனது உடல் மொழியால் பல்வேறு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் விக்ரம். அறிமுக நடிகரான அபிஹாசனை தன்னுடன் இணைத்து அவரையும் திரையில் நடிக்க வைத்துள்ளார். நாசரின் மகன் என்பதால் பல்வேறு இடங்களில் அபிஹாசனின் உடல் மொழி தந்தையை நினைவுபடுத்துகிறது. கொஞ்சம் நேரம் வந்தாலும் மனத்தில் பதியும் படியான நடிப்பை அக்ஷராஹாசன் வெளிப்படுத்தி உள்ளார். போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இருவரும் மலேசிய போலீஸ் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி உள்ளனர். மற்ற நடிகர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

தூங்காவனம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜேஷ் எம் செல்வா இந்த படத்தையும் தனது முதல் படம் போல் திருடன், போலீஸ் கதையாகவே கையாண்டுள்ளார். படம் முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ளதால் சர்வதேச தரத்தில் ஹாலிவுட் படம் பார்ப்பது போல் உள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்துள்ளது. சித் ஸ்ரீராம், ஸ்ருதிஹாசன் ஆகியோர் பாடி உள்ள பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. ஸ்ரீனிவாஸ் ஆர் குஹாவின் ஒளிப்பதிவில் மலேசியா கண் முன் தெரிகிறது.
மொத்தத்தில் கடாரம் கொண்டான் – மிரட்டுகிறான்.

– கே.விஜய் ஆனந்த்