சென்னை, ஜூலை 19: அதிமுக ஆட்சியில் போலீசாருக்கு சொந்தவீடு திட்டம், பதவி உயர்வு மற்றும் காப்பீட்டு திட்டத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். காவல்துறை மானிய கோரிக்கை மீது அவர் பேசியது வருமாறு:- திமுக ஆட்சியிலே காவல்துறைக்கு என்னென்ன நன்மைகள் செய்தார்கள் என்பதை பட்டியலிட்டு காட்டினார்கள். அதிமுக ஆட்சியில் ஏராளமான நன்மைகள் செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றில் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

1980-ம் ஆண்டு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் துவக்கப்பட்டது. பின்னர் அதிமுக ஆட்சியில் 1989-ல் அது நிறுத்தப்பட்டது. பின்பு 1991-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணையில் அமர்ந்தவுடன், அது மீண்டும் துவக்கப்பட்டது. சிலை கடத்தல் பிரிவு 1983ம் ஆண்டு துவக்கப்பட்டது. காவலர்களுக்கு மானிய விலையில் பொருட்கள் முதன்முறையாக வழங்கப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்.

1991-ம் ஆண்டு காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கென தனியாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டதும் அதிமுக ஆட்சி காலத்தில் தான்.  காவலர்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்ற அடிப்படையிலே, காவலர்கள் மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு உங்கள் சொந்த இல்லம் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சொந்த இல்ல திட்டத்தை மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்று இன்றைக்கு அரசு திட்டமிட்டு இருக்கின்றது.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவி திட்டத்தின் கீழ் இயற்கை ஏய்தும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூபாய் 1 லட்சத்திருந்து 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.காவலர்கள் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் – ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் கூடுதல் இயக்குநர் தலைமையில் பிரத்யேகமாக ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பணியின் போது வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிரிழந்தால் அவர்களுக்கு 10 லட்சமும், அதேபோல, இரண்டு கண்கள், இரண்டு கால்கள், இரண்டு கைகள் இழந்தால் அதற்கு 4 லட்சம் ரூபாயும், இன்று அரசு தொடர்ந்து காவலர்களுக்காக ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி கொண்டு இருக்கிறது என்பதை தங்கள் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, பணி உயர்வு பற்றி இங்கே குறிப்பிட்டார்கள், தமிழ்நாட்டில் தற்போது 150 பணிநிலைப் பதவிகள் இந்திய காவல் பணியில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 69 பதவிகள் காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல் துறை இயக்குநர், காவல் துறைத் தலைவர் மற்றும் காவல் துறை துணைத் தலைவர் நிலையிலான பதவிகளாகும். இப்பணியிடங்களில், இந்திய காவல் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 81 பணியிடங்கள் காவல் கண்காணிப்பாளர் நிலையிலான பதவிகளாகும். இவற்றில் 47 பணியிடங்களில் இந்திய காவல் பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 32 பணியிடங்களில் (10 மாவட்டங்கள், 14 துணை ஆணையர்கள் மற்றும் 8 சிறப்பு பிரிவுகள்) தமிழ்நாடு காவல் பணியில் நேரடியாக துணைக் காவல் கண்காணிப்பாளர்களாக / நேரடி காவல் உதவி ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் (31 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 1 உதவி ஆய்வாளர்) தற்போது பதவி உயர்வில் காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.