நீலாங்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம் தயாரிப்பு

சென்னை

சென்னை, ஜூலை 19: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பாலவாக்கம், கொட்டிவாக்கம் உள்ளிட்ட 14 பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. சட்டசபையில் துணை வினாக் களுக்கான குறிப்பு தாக்கல் செய்யப் பட்டது. அதில் கூறியிருப்பது வருமாறு:- சென்னை மாநகரைப் பொறுத்தமட்டில், சென்னை மாநகரத்துடன் புதிதாக இணைக்கப்பட்ட, 42 உள்ளாட்சி அமைப்பு பகுதிகள், வளசரவாக்கம், ஆலந்தூர், மாதவரம், மீனம்பாக்கம், மதுரவாயல், நொளம்பூர், சூரப்பட்டு, புத்தகரம், கதிர்வேடு மற்றும் உள்ளகரம்- புழுதிவாக்கம் ஆகிய 10 பகுதிகளில் 312 கோடியே 66 லட்சம் ரூபாய் கோடி மதிப்பீட்டில் பணிகள் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

பெருங்குடி, போரூர், பள்ளிக்கரணை, அம்பத்தூர், திருவொற்றியூர், கத்திவாக்கம், ராமாபுரம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், மணலி, சின்னசேக்காடு, மணப்பாக்கம், காரம்பாக்கம், நெற்குன்றம் மற்றும் முகலிவாக்கம் ஆகிய 15 பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 1028 கோடியே 45 லட்சம் ரூபாய் கோடி மதிப்பில் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ஈஞ்சம்பாக்கம், ஜல்லடம்பேட்டை, நந்தம்பாக்கம், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, மடிப்பாக்கம், புழல், மாத்தூர், தீயம்பாக்கம், வடபெரும்பாக்கம், செம்மஞ்சேரி, ஒக்கியம்-துரைப்பாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய 14 பகுதிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.