சினிமா எடுக்கும் ஆசையில் குழந்தையை கடத்தினோம்

சென்னை

சென்னை, ஜூலை 19: விரைவில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையால்தான் குழந்தையை கடத்தினோம் என்று அமைந்தகரையில் டாக்டரின் குழந்தையை கடத்திய வழக்கில் கைதான காதல்ஜோடி, போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.  சென்னை அமைந்தகரை ஷெனாய் நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி நந்தினி. தனியார் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு அவன்கா (3.5 வயது) என்ற குழந்தை உள்ளது. முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்துவருகிறாள்.

நேற்று மதியம் பள்ளிக்கு சென்ற பணிப்பெண் அம்பிகா, சிறிதுநேரத்தில் நந்தினிக்கு போன் செய்து தன்னையும், குழந்தையையும் கடத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். அதில் பேசிய மர்மநபர் ரூ. 60 லட்சம் தந்தால் மட்டுமே இருவரையும் உயிருடன் விடுவதாக கூறியுள்ளார். புகாரின் பேரில், அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைத்து செல்போன் எண்ணை கண்காணித்ததில், புழலில் பதுங்கியிருந்த செங்குன்றத்தை சேர்ந்த முகமது கலிமுல்லா சையது (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின்பேரில், கோவலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த அம்பிகா மற்றும் குழந்தையையும் மீட்டனர். ஆனால், போலீஸ் விசாரணையில், அம்பிகாவும்-கைது செய்யப்பட்ட முகமது கலிமுல்லாவும் காதலர்கள் என்பது தெரியவந்தது.  இதனையடுத்து, அம்பிகாவையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில், இவர்கள் இருவரும் சினிமா கம்பெனியில் வேலை பார்த்துள்ளனர்.

சினிமா படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் விரைவில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதால், பணக்காரர்களின் வீட்டில் வேலைக்கு சேர்ந்து அவர்களின் குழந்தையை கடத்தி ஒரே நாளில் லட்சகணக்கில் பணம் சம்பாதித்து விடலாம் என்ற நோக்கத்திலேயே குழந்தையை கடத்தியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.