செந்தில்பாலாஜிக்கு சபாநாயகர் எச்சரிக்கை

சென்னை

சென்னை, ஜூலை 19: சட்டசபையில் தேவையில்லாமல் குறுக்கீடு செய்ததாக திமுக உறுப்பினர் செந்தில்பாலாஜியை சபாநாயகர் தனபால் கடுமையாக எச்சரித்தார். மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசும் போது, இறுதி ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் தேசிய எக்ஸிட் தேர்வு எழுத வேண்டும் என்ற மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது, இதை தமிழகம் ஏற்கக்கூடாது என கூறினார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் அதற்கு பதிலளித்த போது, மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வை எதிர்ப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் எனக் கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உயர்மின் கோபுரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்த போது, செந்தில் பாலாஜி குறுக்கிட்டார்.

எழுந்து நின்று கைகளை நீட்டி செந்தில் பாலாஜி பேச முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்தார்.