சென்னை, ஜூலை 19: வேலூர் மக்களவை தேர்தலையொட்டி 209 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- வேலூர் மக்களவைத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 209 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சி.வி.சண்முகம். பொறுப்பு மாவட்டங்கள்: காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, நாகப்பட்டினம் இதில் மாவட்டச் செயலாளர்களாக உள்ள எம்.சி. சம்பத், ஓ.எஸ்.மணியன் ஆகிய அமைச்சர்களும், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், அருண்மொழித்தேவன், எம்எல்ஏக்கள் உட்பட 25 தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் கே.பி.அன்பழகன். பொறுப்பு மாவட்டங்கள்: வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், திருவாரூர், புதுக்கோட்டை. தேர்தல் பணிக்குழுவினர்: மதுசூதனன், சி.பொன்னையன், தமிழ்மகன் உசேன், அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், காமராஜ், சி. விஜயபாஸ்கர், நீலோபர் கபீல் மற்றும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உட்பட 50 பேர்.ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கே.பி. முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்.

அமைச்சர் கேசி வீரமணி , எம்எல்ஏ ரவி மேற்பார்வையில் பொறுப்பாளர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக்குச் சென்று, 22.7.2019 – திங்கட் கிழமை காலை 10 மணி முதல் தேர்தல் பணிகளை, அங்கேயே தங்கியிருந்து முழு வீச்சில் மேற்கொண்டு வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.