விஐடியுடன் நியூயார்க் பல்கலைக்கழகம் ஓப்பந்தம்

தமிழ்நாடு

வேலூர், ஜூலை 19: ஆளில்லாமல் வாகனம் வடிவமைப்பு தொடர்பாக விஐடியுடன் நியூயார்க் பல்கலைக்கழகம் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் கையெழுத்திட்டார். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-
விஐடி மற்றும் நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹம்டன் பல்கலைக்கழகம்) இணைந்து ஆராய்ச்சி மையம் அமைத்துள்ளோம். இந்தியாவில் ஆளில்லா வாகனம் தானியங்கி முறையில் இயங்கும் கார் மற்றும் வாகனங்களை வடிவமைப்பு செய்ய இருக்கின்றோம்.

விஐடி மாணவர்கள் முதுநிலை பட்ட படிப்பு விஐடியில் 3 1/2 ஆண்டுகளும், பிங்ஹம்டன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில்  1 1/2 வருடமும் பயில வேண்டும். இளங்கலை பட்டத்தை விஐடியும், முதுகலை பட்டத்தை அமெரிக்காவின் பிங்ஹம்டன் பல்கலைக்கழகமும் வழங்கும். இது மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.  மேலும் இந்த ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு ஓரு வருடம் குறைவாக படிக்க முடியும். 4 ஆண்டுகள் இந்தியா விலும் 2 ஆண்டுகள் அமெரிக்காவில் படிப்பது வழக்கமாக உள்ளது. இம்முறையில் பயில 6 ஆண்டுகள் ஆகும்.

மேலும் வழக்கமான கல்வி கட்டணத்தை விட குறைவான கல்வி கட்டணத்தை வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம். இதன் மூலம் குறைந்த செலவில் அமெரிக்க பட்டபடிப்பை முடிக்க முடியும்.  இந்த படிப்பு இந்த கல்வியாண்டு  2019-20 தொடங்குகிறது. இதில் விஐடியின் 13 துறைகளின் மாணவர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவர் என விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தெரிவித்தார்.

இந்த புரிந்துணர்வு ஓப்பந்தத்தின் போது விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், பிங்ஹம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் தில்லான், ஸ்ரீஹரி, விஐடி மெக்கானிக்கல் துறையின் வாசுதேவன், சர்வதேச உறவுகள் துறை துணை இயக்குநர் பிரிஜேஷ் நாயர் ஆகியோர் உடனிருந்தனர்.