மேல் மட்டச்சாலை பணி விரைவில் தொடங்கும்

இந்தியா

புதுடெல்லி, ஜூலை 19: மதுரவாயல்-எண்ணூர் இடையிலான மேல்மட்ட விரைவுச்சாலை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. இதனால் இந்த சாலைப்பணிகள் விரை வில் தொடங்கும் என தெரிகிறது. எண்ணூரில் இருந்து மதுரவாயல் வரை 19 கி.மீ தொலைவுக்கு ரூ.1800 கோடி மதிப்பில் விரைவுச்சாலை அமைப்பதற்கு 2008-ல் ஒப்புதல் பெறப்பட்டு 2011-ல் பணிகள் தொடங்கின.

2013-ல் இத்திட்டத்திற்கு அப்போதைய ஜெயலலிதா அரசு தடை விதித்தது. இந்த வழித்தடத்தில் கூவம் ஆற்றில் 32 தூண்கள் அமைக்கப்படுவதால் நீரோட் டம் தடைபடும் என்பதாலும், கூவத்தை ஆக்கிரமித்து கட்டுமானக் குப்பைகள் கொட்டப்படுவதாலும் இந்த தடை விதிக் கப்படுவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 2014-ல் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. 6 வருடங்களாக கிடப்பில் கிடந்த இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது தடை நீங்கி இருப்பதால் கட்டுமானப்பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.