5 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி

சென்னை

சென்னை, ஜூலை 19: அத்திரவரதர் தரிசனத்திற்கு வந்து உயிரிழந்த 5 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- அத்திவரதரை திருவோணம் நட்சத்திரமான வியாழக்கிழமை தரிசனம் செய்ய சுமார் 1.75 லட்சம் பக்தர் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள்.

ஆவடியை சேர்ந்த முத்து என்பவரின் மனைவி நாராயணி அத்திவரதரை தரிசனம் செய்தபின் வீடு திரும்பும்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தமிழக அரசு அமைத்திருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய் உள்ளது என்றும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் எனவும் தெரிவித்தனர்.

திருவல்லிக் கேணியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் நடராசன் தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ரத்தக் கொதிப்பும், இருதய நோயும் அவருக்கு இருந்துள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஆந்திரம் குண்டூரைச் சேர்ந்த சோமசேகர ராவ் மனைவி கெங்கலட்சுமி தீவிர ரத்தக் கொதிப்பு நோயாளி. இவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சேலத்தைச் சேர்ந்த வைகுண்டன் என்பவரின் மகன் ஆனந்த் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு வலிப்பு ஏற்பட்டதும், செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு உயிரிழந்தார். ஆந்திரம் ராஜமுந்திரியைச் சேர்ந்த சக்தி அஜய்குமார் அத்திவரதரைத் தரிசித்துவிட்டு, மூலவர் தரிசனம் முடித்துவிட்டு படிக்கட்டில் இறங்கும்போது, கால் தவறி விழுந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரும் உயிரிழந்தார். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.