மும்பை, ஜூலை 19:  காயத்தால் பாதிக்கப்பட்ட வீரர்களின் உடல்தகுதி, நிர்வாகக்குழு உத்தரவு போன்ற காரணங்களால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு, திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா மூன்று டி20, ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான தேர்வு இன்று மும்பையில் நடைபெறுவதாக இருந்தது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு கூடி இந்திய அணியை தேர்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய அணி தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்திய அணி தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளதாம். காயத்தில் சிக்கிய சில வீரர்களின் உடல்தகுதி அறிக்கை, நாளை (சனிக்கிழமை) மாலைதான் கிடைக்கும் என்பதாலும். தேர்வுக் குழுவின் கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கக்கூடாது என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு உத்தரவிட்டதைத் தொடர்ந்தும் அணி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.