வேலூர், ஜூலை 19: என் மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றிக் கொல்ல சிலர் சதித்திட்டம் தீட்டியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார், ஆம்பூரில் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் ஆண்டியப்பனூர் மற்றும் மோர்தானா அணைகளையும், நீதிமன்றங்களையும், சட்ட கல்லூரி, மருத்துவ கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மேம்பாலம் மற்றும் காவிரி தண்ணீரையும் கொண்டு வந்தவன் நான் தான்.

ஆனால் வேலூரிலேயே இல்லாத ஒருவர் நான் வேலூர் மாவட்டத்திற்கு என்ன செய்தேன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். எங்கள் வீட்டில் பணத்தை கொண்டு வந்து வைத்து விட்டு வருமான வரித்துறையினரை அனுப்பியது யார்? எங்கள் வீட்டு வேலைக்காரருக்கு செல்போன் வாங்கி கொடுத்தது யார்? என்னுடைய மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது யார்? அந்த துரோகி யார்? என எனக்கு தெரியும். ஆனால் பெயரை கூறமாட்டேன்.

இவ்வாறு அவர் பேசும் போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவரது உருக்கமான பேச்சை கேட்டு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்கள் வீட்டில் சோதனை நடத்த உத்தரவு பிறப்பித்த வருமான வரித்துறை அதிகாரி ஓய்வுபெற்ற பிறகும், அவரை வேலூர் மக்களவை தேர்தலில் செலவு கணக்கை பார்க்க தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. நான் சொன்னதை செய்பவன், வேலூருக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அதேபோல் என்னுடைய மகனும் வாக்குறுதியை நிறைவேற்றுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.