சைபர் கிரைம் காவல் நிலையங்கள்: டிஜிபி

சென்னை

சென்னை, ஜூலை 19: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளதாக டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களான பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், இமெயில் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் பணமோசடி உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் சமூக ஊடகங்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் , தமிழக காவல்துறையில் சைபர் குற்றப்பிரிவு தனியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் மாதம் சைபர் குற்றப்பிரிவுக்கு தனியாக ஏடிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதன் அடுத்தகட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், 6 மாவட்டங்களில் சைபர் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.

இவற்றில் பணியாற்ற ஆர்வமுள்ள காவலர்கள், தலைமைக் காவலர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சைபர் குற்ற வழக்குகளை கையாளுவதற்கும், விசாரணை செய்வதற்குரிய தகுதியும் திறனும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது தொடர்பாக, தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சைபர் கிரைம் துறையில் பணியாற்ற விருப்பம் உள்ள காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பணிக்கு விண்ணப்பிக்கிறவர்கள் வரும் 26-ஆம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.