திண்டுக்கல், ஜூலை 19:  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும், தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை அதிகரிப்பதுடன் அவர்களுக்கு சர்வதேச அரங்கில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான், டி.எம்.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், 4-வது சீசன் திண்டுக்ககல் அடுத்த நத்தத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேதர் ஜாதவ், இந்த தொடரை இன்று மாலை தொடங்கி வைக்கிறார். ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை நடக்கும் இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காஞ்சி வீரன்ஸ், காரைக்குடி காளை, கோவை கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நடக்கும் தொடக்க போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலர் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியை, கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் அணி எதிர்கொள்கிறது. இந்த தொடரில் நட்சத்திர வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், அபினவ் முகுந்த் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இந்த தொடரில் பங்கேற்றதன்மூலம் தான், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின் முருகன், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் ஐபிஎல் தொடருக்கு தேர்வானார்கள் என்பது நினைவுக்கூரத்தக்கது.