சென்னை, ஜூலை 19: கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று கே.ஏ.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். சட்டசபை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பேசுகையில்:- எனது சிதம்பரம் தொகுதியில் உள்ள சிதம்பரம் நகராட்சி பேருந்து நிலையம் கட்டிமுடிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகும். இப்பேருந்து நிலையம் மிகவும் பாழடைந்த நிலையில் சிதிலமடைந்துள்ளது. பயணிகளின் உயிருக்கு அவ்வபோது பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

எனவே சிதம்பரம் பேருந்து நிலையத்தை புதிய பொலிவுடன் அதிநவீன வசதியுடன் கட்டிதர வேண்டும். சிதம்பரம் தொகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மாணவிகளின் கல்வி நலனை கருத்தில் கொண்டு சிதம்பரம் நகரில் மகளிருக்கு என்று தனியாக ஒரு அரசு மகளிர் கலைக் கல்லூரியை அமைத்து தர வேண்டும்.
பரங்கிபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமமான சாமியார்பேட்டை மீனவ கிராமத்திற்கு மீனவர் நலன்கருதி, மீனவ நண்பனான ஜெயலலிதா அரசு தூண்டில் வளைவு ஒன்றினை அமைத்து தர வேண்டும். தட்டுங்கள் திற்க்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப என்னுடைய தொகுதி மக்களின் நலனுக்காக நான் எடுத்து வைத்த கோரிக்கைகளை தாயுள்ளதோடு பரிசீலனை செய்து நிறைவேற்றி தர வேண்டும்.

9 சட்டமன்ற தொகுதியை கொண்ட கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் ஒன்றினை அமைத்து தர வேண்டும். சிதம்பரம் மருத்துவகல்லூரி மருத்துவமனையானது தமிழக அரசின் உயர்கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அண்ணாமலை பல்கலைகழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தேவைகள்-தேவையான மருத்துவர்கள் நியமிப்பதில் தேவையற்ற சுணக்கம் ஏற்படுகிறது. எனழே இம்மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி வழங்கியோ அல்லது இம்மருத்துவமனையை மக்கள் நல்வாழ்வுதுறையின் கீழ் கொண்டு வந்து இப்பகுதி மக்களின் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டவேண்டும்.

சிதம்பரம் தொகுதி மக்களின் 40ஆண்டுகால கனவு திட்டமான திட்டு காட்டூர் – பெராம்பட்டு கிராமத்திற்கிடையே கனிமவள நிதியில் இருந்து உயர்மட்ட பாலம் அமைத்திட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்த சட்டதுறை அமைச்சர் சிவிசண்முகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சென்னை மகானத்தின் உள்ளாட்சிதுறை அமைச்சராக இருந்தவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியர் மாவட்டத் தலைநகரான கடலூரில் மணிமண்டபம் அமைத்தற்கும், நாளை பேரவையில் ராமசாமி படையாச்சியார் திருவுருவட படத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.