துபாய், ஜூலை 19:  சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) இடைக்கால தடைவிதித்துள்ளது.

ஒரு காலத்தில் பலம் வாய்ந்த அணியாக இருந்த ஜிம்பாப்வே அணி, கடந்த சில வருடங்களாக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலையீடு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்நாட்டு அரசு, கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க, இடைக்கால கமிட்டியைத் தேர்வு செய்திருந்தது.
கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு இடைக்கால தடை விதிக்க ஐசிசி முடிவு செய்தது. இந்த தடையால், அந்நாட்டுக்கு ஐசிசியால் வழங்கப்பட்டு வந்த நிதி, நிறுத்தி வைக்கப்படும். மேலும், ஐசிசி நடத்தும் எந்தவித போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணியால் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.