அமராவதி, ஏப்.11:ஆந்திராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை சேதப்படுத்திய ஜனசேனா கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் இன்று காலை முதல் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஆந்திராவின் குண்டக்கல் சட்டமன்றத் தொகுதியில் ஜன சேனா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மதுசூதன் குப்தா இன்று காலை, கட்டி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டு போட வந்தார். அப்போது, வாக்குச்சாவடியில் உள்ள அறிவிப்பு பலகையில், சட்டமன்ற மற்றும் மக்களவை தொகுதிகளின் பெயர்கள் சரியாக தெரியவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வேட்பாளர் மதுசூதன் குப்தா, வாக்குச்சாவடியில் இருந்த ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைத்துள்ளார். இதனால் அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் வேட்பாளர் மதுசூதன் குப்தாவைக் கைது செய்துள்ளனர்.