புதுடெல்லி, ஜூலை 20: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரகா தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வியை சந்தித்தை அடுத்து தற்போதைய தேசிய பொதுச்செயலாளரான சுதர்சன் ரெட்டி பதவி விலகும் விருப்பத்தை கட்சியில் தெரிவித்தார். இந்த நிலையில் அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் புதுடெல்லியில் நடந்தது.

இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக யாரை நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. இதில் தற்போதைய தேசிய செயலாளரான டி.ராஜா, கேரளத்தை சேர்ந்த பினோய் விஸ்வம், மூத்த தலைவர் அமர்ஜெத் கவுர், அதுல்குமார் அஞ்சன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.கூட்ட முடிவில் டி.ராஜாவை கட்சியின் பொதுச்செயலாளராக நியமிப்பது என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் கட்சியின் தேசிய குழுக்கூட்டத்துக்குப் பிறகு, டி.ராஜாவின் தேர்வு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

டி.ராஜா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்தவர். மாநிலங்களவை எம்.பி.யான இவர் கட்சியின் தேசிய செயற்குழுவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்து வருகிறார். இவர் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநில செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். பின்னர் அம்மன்றத்தின் அகில இந்திய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.