சென்னை, ஜூலை 20: புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவித்த சூர்யாவை அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், தனது கருத்து மீது எழுந்த விமர்சனங்களுக்கு நடிகர் சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி என்பது ஒரு சமூக அறம், பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது.

நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப் பட்ட மனசாட்சிதான் அனைவருக்கும் சமமான தேர்வு என்பதை விட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான தரமான இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது.

அகரம் பவுண்டேஷன் மூலம் 3 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர். நீட் தேர்வுக்கு பிறகு அரசு பள்ளியில் படித்த ஒருவர் கூட அகரம் பவுண்டேஷன் மூலம் மருத்துவ கல்வியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக்கொள்கையில் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுக்கு பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது என்றார்.