காஞ்சிபுரம், ஜூலை 20: பெருமாளுக்கு மிகவும் உகந்த 3-ம் சனிக்கிழமையான இன்று ஆதி அத்திவரதருக்கு ஆரஞ்சு வண்ணத்தில், ஒரு பக்கத்தில் பச்சை, மறுபக்கத்தில் நீலக்கலர் பார்டர்கள் போட்ட பட்டாடை அணிவிக்கப்பட்டுள்ளதுடன், செண்பகம், முல்லை, மல்லி உள்ளிட்ட பல வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.

20-ம் நாளான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் இசைக்க நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. 3-வது சனிக்கிழமை என்பதால், இன்றும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து பெருமாளை தரிசனம் செய்தனர். ஆதி அத்திவரதருக்கு ஆரஞ்சு வண்ணத்தில், ஒரு பக்கத்தில் பச்சை, மறுபக்கத்தில் நீலக்கலர் பார்டர்கள் போட்ட பட்டாடை அணிவிக்கப் பட்டுள்ளதுடன், பல வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலை மற்றும் செண்பகம்,முல்லை, மல்லிகை மாலைகள் அத்திவரதரின் கழுத்தை அலங்கரிக்கின்றன.

பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குடிநீர், மொபைல் டாய்லட்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நடந்த அசம்பாவித சம்பவத்துக்கு பிறகு கூட்ட நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாகவும் நிதனமாகவும் சாமியை பார்த்து தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் கர்ப்பிணி, குழந்தைகள், வயதானவர்களுக்கு மேற்கு கோபுரத்தில் இருந்து சாய்தளம் அமைத்துள்ளதால் அவர்கள் சிரமமின்றி சாமி தரிசனம்செய்து வருகின்றனர்.  கிழக்கு கோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், திருப்பதியில் ஒரு இடத்தில் பக்தர்களை நிறுத்தி வைத்து அனுப்புவது போல், காஞ்சியிலும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.இதனால் பக்தர்கள் தாமதமானாலும் நிதானமாக சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

3-ம் சனிக்கிழமை என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிக்கு வருகை தந்துள்ளதால் தரிசன வரிசை நீண்ட தூரத்திற்கு நீண்டுள்ளது.  இதனால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இறங்கி நடந்து வந்து தரிசன வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனத்துக்காக நடந்து வரும் பக்தர்கள் கோவிந்தா…கோவிந்தா.. நாராயணா… நாராயணா… என்ற பக்தி கோஷமிட்டப்படி வருவதை காணமுடிகிறது.