டி.என்.பி.எல். தொடக்கப் போட்டி: திண்டுக்கல் அணி வெற்றி

விளையாட்டு

திண்டுக்கல், ஜூலை 20: தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் தொடக்க போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் திண்டுக்கலில் நேற்று தொடங்கியது. தொடக்கப்போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியை, சேப்பாக் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங்கை தேர்வுசெய்ய, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் அஸ்வின் 19 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய சேப்பாக் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளிக்க, மற்றொரு தொடக்க வீரர் ராஜூவும் டக்-அவுட்டானார்.  பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆட்டநேரமுடிவில் சேப்பாக் அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 105 ரன்களே எடுத்ததால், 10 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.  3 ஓவர்கள் வீசி, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய திண்டுக்கல் வீரர் சிலம்பரசனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.