சென்னை, ஜூலை 20: ஓட்டேரியில் குடும்ப தகராறில் கணவனை அரிவாளால் வெட்டிய மனைவி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பாடி கலைவாணர் நகரை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 35), ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 31), இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்த நிலையில், நேற்றும் வழக்கம் போல் பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஏகாம்பரம், வீட்டில் மகேஸ்வரி இல்லாததையடுத்து, அதே பகுதியில் உள்ள அவரது மாமியர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது கணவன்-மனைவிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனையடுத்து, தகராறில் ஈடுபட்ட ஏகாம்பரத்தை, மகேஸ்வரி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கத்தி மற்றும் கட்டையால் சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்துவந்த தலைமை செயலக காலனி போலீசார், வெட்டுக்காயம் அடைந்த ஏகாம்பரத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  மேலும் ஏகாம்பரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகேஸ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.