புதுச்சேரி, ஜூலை 20: தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்களுக்கு, ராணுவ பயிற்சி அளிக்கப்படும் என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.  புதுச்சேரியில் ஆண்டுதோறும் என்.சி.சி. எனப்படும் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள், பாய்மரப் படகில் கடல் சாகச பயணம் மேற்கொள்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கடல் சாகச பயணம் கடந்த 9-ம் தேதி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

இதில், 60 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கடலூர், பரங்கிப்பேட்டை, தரங்கம்பாடி, காரைக்கால் சென்று மீண்டும் அதே வழியாக திரும்பி அவர்கள் நேற்று மாலை புதுவை வந்தடைந்தனர். கடல் சாகச பயணத்தை முடித்துவிட்டு புதுவைக்கு திரும்பிய மாணவி, மாணவர்களை வரவேற்கும் விதமாக தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கொடியசைத்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: கடல் சாகச பயணத்தை வெற்றிகரமாக முடித்த மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் 400 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளனர். இந்த பயணம் மிகவும் கடினமானது. ஏனென்றால். இவர்கள் பயணம் செய்து வந்த கடல் பகுதி சீற்றம் அதிகமாக காணப்படும். காற்றின் வேகமும் அதிகமாக இருக்கும், இந்த பயணத்தின் மூலம் அவர்களுக்கு பல விதமான புது அனுபவங்கள் கிடைத்திருக்கும்,

தேசிய மாணவர் படை என்பது ராணுவத்தில் பாதி. எனவே, ராணுவத்தில் உள்ளது போல பயிற்சிகள் அனைத்தும் இந்த மாணவர்களுக்கு கற்று தரப்படும் என்றார்.
இதனையடுத்து, சாகச பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு, அவர் பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கமாண்டர் ஜெயச்சந்திரன் கமாண்டிங் அதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.