பெங்களூரு:,ஜூலை 21: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிபடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் மே மாத இறுதி யில் பெய்ய வேண்டிய தென் மேற்குப் பருவமழை தாமதமான தால் காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு கடந்த மே, ஜூன் மாத காவிரி மேலாண்மை ஆணைய கூட்டங்களில், காவிரியில் நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடு மாறு முறையிட்டது.

இதையடுத்து ஆணைய தலைவர் மசூத் உசேன் கர்நாடகாவில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டார்.
கர்நாடக அணைகளில் இருந்து மழை காரணமாக காவிரியில் நேற்று 8,300 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வரத்தொடங்கியுள்ளது.

கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து கடந்த 16-ம் தேதி விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நீர் நேற்று முன்தினம் தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்ணீர் வந்து சேரவில்லை. இதற்கிடையே, கேஆர்எஸ் அணையில் இருந்து நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்த தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று விநாடிக்கு 4,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கபினியில் இருந்து நேற்று விநாடிக்கு 3,500 கனஅடி நீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைந்தது.

மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிபடியாக அதிகரிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில பொதுப்பணிதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நிலவரப்படி மேட்டூர் அணையில் 39.28 அடியாக நீர்மட்டம் உள்ளது. நீர் இருப்பு 11.72 டிஎம்சி-யும், நீர்வரத்து – 233 கனஅடியாகவும் உள்ளது. நீர் திறப்பு – 1000 கனஅடியாக உள்ளது. கர்நாடகத்தில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் ஆணையின் நீர் சேமிப்பு பகுதிகள், மதகுகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.