சென்னை,ஜூலை 21: சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் பாய உள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று மாலை 6,43 மணிக்கு தொடங்குகிறது.

கடந்த 15ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராக இருந்தனர்.  ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு 54 நிமிடங்கள் 24 வினாடிகள் இருந்த போது ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்டவுன் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணி அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்ட நிலையில் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு சந்திராயன்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராக உள்ளதாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

தொழில்நுட்பக்கோளாறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு, ஒத்திகை நல்லபடியாக நடைபெற்றது. கவுண்டவுன் மாலை 6,43 மணிக்கு தொடங்கும். விண்ணில் ஏவப்பட்ட பிறகு 48 நாட்கள் 15 கட்டங்களை கடந்து சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும். தென் துருவப் பகுதியில் இதுவரை எந்த விண்கலமும் இறங்காததால் இது உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.