காஞ்சிபுரம், ஜூலை 21: அத்திரவரதர் தரிசனத்துக்காக காஞ்சிபுரத்தில் கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தரிசன நேரத்தை அதிகரித்து அதிகாலை 4 மணி முதல் அனுமதிப்பத குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் இன்று காஞ்சிபுரம் சென்றனர். அங்கு அவர்கள் அத்திவரதர் தரிசன ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

அதன் பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தலைமைச்செயலாளர் கூறியதாவது:-
அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் உற்சவத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நோயுற்றோர், முதியோர் அத்திவரதரை பார்க்க பேட்டரி கார்களை முறையாக இயக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதிகாலை 4 மணிக்கு தரிசன நேரத்தை தொடங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
நன்கொடையாளர்கள் கூடுதலாக பிஸ்கெட், தண்ணீர் வழங்க கோரப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக கூடுதல் கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது.

வெளிமாவட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணி வரை துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.  இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் டிஜிபி திரிபாதி கூறுகையில், அத்திவரதர் உற்சவத்திற்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தன்னார்வலர்கள் உதவி செய்ய அழைப்பு விடுத்துள்ளோம் என்று மேலும் அவர் தெரிவித்தார்.