ஜகர்தா, ஜூலை 21: இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேர் செட்டில் சீனாவின் சென் யு பெயை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யு பெயை எதிர்கொண்டார். இதில் தொடக்கத்தில் தடுமாறிய சிந்து பிறகு சரிவில் இருந்து மீண்டு முதல் செட்டை வென்றார். 2-வது செட்டிலும்புள்ளிகளை குவித்தார்.

46 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் பி.வி.சிந்து 21-19, 21-10 என்ற நேர் செட் கணக்கில் சென் யு பெயை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரைஇறுதியில் ஜப்பானின் அகானே யமாகுச்சி 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்குக்கு (சீனதைபே) அதிர்ச்சி அளித்தார்.

இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சிந்து, 4-ம் நிலை வீராங்கனையான யமாகுச்சியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். யமாகுச்சிக்கு எதிராக இதுவரை 14 ஆட்டங்களில் மோதியுள்ள சிந்து அதில் 10-ல் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.