காஞ்சிபுரம், ஜூலை 21: சயன கோலத்தில் பக்தர்களுக்கு இன்று 21-வது நாளாக தரிசனம் தரும் அத்தி வரதர், ரோஜா நிறப்பட்டு உடுத்தி, மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்பகம், அல்லி மலர் மாலைகளை அணிந்து அற்புதக்காட்சியளித்தார்.

மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று, காலையில் சுப்ரபாதம் இசைக்கப்பட்டு, பள்ளியெழுந்த அத்தி வரதர் சிறப்பு நைவேத்தியம் செய்யப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலையிலிருந்தே பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. காஞ்சிபுரம் நகரத்துக்குள் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து வாகனங்களும் 3 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருந்தன.

பக்தர்கள் நடந்துதான் அத்திவரதரை தரிசிக்க வரவேண்டியிருந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மூன்றாவது சனிக்கிழமையான நேற்று இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் 5 கி.மீட்டர் வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசித்தனர். விடுமுறை தினமான இன்றும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, எம்.சி. சம்பத் ஆகியோர் குடும்பத்துடன் இன்று அத்தி வரதரை தரிசித்தனர்.