ஷீலா தீட்சித் மறைவு: தலைவர்கள் இரங்கல்

இந்தியா

புதுடெல்லி, ஜூலை 21:
மூத்த காங்கிரஸ் தலைவரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான ஷீலா தீட்சித் நேற்று டெல்லியில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் டெல்லி முன்னாள் முதல்வரும், மூத்த அரசியல் தலைவராக விளங்கியவருமான ஷீலா தீட்சித் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

முதல்வராக அவர் பதவி வகித்த காலத்தில் தலைநகர் மிகப்பெரிய மாற்றம் அடைந்தது. இதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்’ என்று கூறியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள பதிவுகளில், “ஷீலா தீட்சித் சிறந்த நிர்வாகி ஆவார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தம், இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவுகளில், “ஷீலா தீட்சித்தின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம்; டெல்லி வளர்ச்சிக்கு அவர் மிகப்பெரும் பங்களிப்பு அளித்துள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மோடி நேரில் மரியாதை: இதன்பின்னர் ஷீலா தீட்சித்தின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட காங்கிரஸ் தலைவரை நாடு இழந்து விட்டது’ என்று தெரிவித்துள்ளார். ராகுல் வெளியிட்டுள்ள செய்தியில் ஷீலா தீட்சித்தின் சேவைகளை புகழ்ந்துள்ளார்.