ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 22: சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து சந்திராயன்-2 விண்கலத்தை ஏந்தியபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கான கவுண்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. கவுன்டவுன் வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து இன்று சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

இதுவரை எந்தவொரு உலக நாடும் நிலவின் தென்துருவப் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பாத நிலையில் இந்தியாவின் சந்திராயன்-2 விண்கலம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதுபோன்ற பல்வேறு சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளதால், சந்திரயான்-2 திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமன்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.