புதுச்சேரி, ஜூலை 22: புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர்கள் பரூக் மரைக்காயர், சண்முகம், ஆர்.வி. ஜானகிராமன் ஆகியோருக்கும் சிலை வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பதினான்காவது சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை ஒன்பதரை மணிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து துவக்கி வைத்தார்.

சட்டப்பேரவை துவங்கியதும் முன்னாள் முதலமைச்சர் ஆர். வி.ஜானகிராமன் மறைவுக்கு முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல் தீர்மானம் முன்மொழிந்தார்.
இவரை தொடர்ந்து அரசு கொறடா அனந்தராமன், பிஜேபி எம்எல்ஏக்கள் சாமிநாதன்,என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வம், திமுக எம்எல்ஏ சிவா, அதிமுக எம்எல்ஏ அன்பழகன், அமைச்சர்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி ஜானகிராமனுக்கு இரங்கல் தீர்மானத்தில் புகழாரம் சூட்டினார்கள்.

அதிமுக, திமுக, என்ஆர் காங்கிரஸ், பிஜேபி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் எம்எல்ஏக்களின் கோரிக்கையாக புதுச்சேரியில் ஜானகிராமனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கையாக பேசினார்கள். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத்தில் பேசியதாவது:- நான் எம்பியாக இருந்த காலத்தில் எனக்கும் ஜானகிராமன் முதலமைச்சராக இருந்தபோது நெருங்கிய தொடர்பு உண்டு.

புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று அதை வலியுறுத்துவதற்காக என்னையும் அந்த பட்டியலில் இணைந்தார். அடிக்கடி எனக்கும் முன்னாள் முதல்வர் ஜானகிராமனுக்கு அறிக்கை போர் நடக்கும். வாத விவாதங்கள் கட்சிக் கொள்கைக்கு உட்பட்டு நடக்கும்.தனி மாநில அந்தஸ்து வழங்கு வதற்கு அரசு முடிவெடுத்தபோது புதுச்சேரி, காரைக்காலுக்கு மட்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும், மாஹே ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் வழங்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்த போது அதை எதிர்த்து, முன்னாள் முதல்வர் ஜானகிராமன் பகிரங்கமாக வெளிநடப்பு செய்தார்.

மாநிலத்தில் வளர்ச்சிக்கு மிகவும் பாடுபட்டவர் அவரது ஆட்சிக் காலத்தில் புதுச்சேரி மாநில மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. புதுச்சேரியில் முன்னாள் முதல்வர்கள் பரூக் மரைக்காயர், சண்முகம், ஆர்.வி. ஜானகிராமன் ஆகியோருக்கு சிலை வைக்கப்படும் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக எம்எல்ஏ அன்பழகன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்றார். அது பரிசீலனையில் உள்ளது என்று முதலமைச்சர் கூறினார்.