லண்டன், ஜூலை 22:உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கடைசி கட்டத்தில் இரண்டாவது ரன் ஓடிய போது, கப்டில் எறிந்த பந்து அவரது பேட்டில் பட்டு பவுண்டரியை ஓடியது. இதனால் நடுவர் தர்மசேனா 6 ரன்களை வழங்கினார்.

இதையடுத்து ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவர் வரை சென்று இறுதியில் இங்கிலாந்து உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.ஆனால் பென் ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை பூர்த்தி செய்யாத நிலையில் பந்து பேட்டில் பட்டு பவுண்டரிக்கு ஓடியதால் அந்த ஓவர் த்ரோவுக்கு 5 ரன் தான் வழங்கியிருக்க வேண்டும், ஆனால் 6 ரன் வழங்கியது நடுவரின் தவறு என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் நடுவர் தர்மசேனா தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

டி.வி. ரீப்ளேயை பார்த்த போது 5 ரன்தான் கொடுத்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்ததாகவும், இருப்பினும் சக நடுவருடன் ஆலோசித்த பிறகே 6 ரன்களை வழங்கியதாகவும், இதனால் வருத்தம் ஏதும் தனக்கு இல்லை என்றார்.