புதுடெல்லி, ஜூலை 22: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தமிழகத்தைச் சேர்ந்த டி.ராஜா (70) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எஸ். சுதாகர் ரெட்டி இருந்து வந்தார். இதனிடையே, உடல்நிலை காரணமாக, அண்மையில் தனது பதவியிலிருந்து எஸ். சுதாகர் ரெட்டி ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் தில்லியில் செய்தியாளர்களுக்கு டி.ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது: நரேந்திர மோடியின் பாசிஸ ஆட்சியின்கீழ் நாடு இக்கட்டான காலகட்டத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகள் தொகுதிகளை இழந்திருக்கலாம்; நாடாளுமன்றத்தில் கட்சியின் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம்.

ஆனால் இதை வைத்து, இடதுசாரிகள் எண்ணிக்கை குறைந்து விட்டனர் என்றோ அல்லது சித்தாந்தம் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இடதுசாரிகள் இழந்து விட்டனர் என்றோ கருதக் கூடாது. இந்த நாட்டின் மக்களுக்கு, இடதுசாரிகள்தான் நம்பிக்கையாகத் திகழ்கின்றனர். தற்போதைய மத்திய அரசின் பிற்போக்கான கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்.

தேர்தல் களத்தில் வேண்டுமானால், பாஜக அரசு வென்றிருக்கலாம். ஆனால் சமூகம் அல்லது அரசியல் களத்தில் வெற்றி பெற முடியாது. அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும். எங்களது திட்டங்களை சீராய்வு செய்ய இருக்கிறோம் என்றார் டி.ராஜா.

பேட்டியின்போது முன்னாள் பொதுச் செயலாளர் எஸ். சுதாகர் ரெட்டியும் உடனிருந்தார். மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது. இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை டி.ராஜா ஏற்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ராஜா, தமிழகத்தை சேர்ந்தவர். அவரது சொந்த ஊர், வேலூர் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் ஆகும். அவரது மனைவி ஆனி ராஜா, இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக உள்ளார்.