புதுடெல்லி, ஜூலை 23: காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறவில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், டிரம்ப் கருத்தை திட்டவட்டமாக மறுத்தார்.

அமெரிக்காவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்த பின்னர் அதிபர் டிரம்ப், காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயாரா என தன்னிடம் மோடி கேட்டதாக கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்பினர்.

பாகிஸ்தானுடன் உள்ள பிரச்சினைகளில் மூன்றாவது நாடு தலையிடக்கூடாது, சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் அடிப்படையிலேயே பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என ஜெய்சங்கர் கூறினார்.