புதுடெல்லி, ஜூலை 23: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் ஏராளமாக இருப்பதால் அவற்றை நிறைவேற்ற வசதியாக பத்து நாட்களுக்கு அவையின் கூட்டம் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கான அறிவிப்பை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று அல்லது நாளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்றத்தின் கூட்டம் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி துவங்கியது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.

பின்னர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஜனாதிபதி உரையின் மீது விவாதம் நடைபெற்றது. பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற 26-ம் தேதி வரை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்றக் கூட்டம் அமைதியாக நடைபெற்று பல்வேறு அலுவல்கள் நிறைவேற்றப்பட்டன.

இருந்தாலும் முக்கிய மசோதாக்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. ஆகவே அவற்றின் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்கு வசதியாக நாடாளுமன்ற கூட்டத்தை மேலும் பத்து நாட்களுக்கு நீட்டிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை இதனை ஏற்கவில்லை. உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு செல்ல வேண்டி இருப்பதால், அவை கூட்டத்தை நீடிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

ஆனால் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தி அவையின் கூட்டத்தை நீட்டிப்பதற்கு அவர்களின் ஒத்துழைப்பை கேட்டுள்ளதாக தெரிகிறது.

பிரதமர் நரேந்திர மோடியே நாடாளுமன்றக் கூட்டம் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பிஜேபியின் நாடாளுமன்றக் கூட்டத்தில் சூசகமாக தெரிவித்ததாக தெரிகிறது.

குறிப்பிட்ட காலத்தை காட்டிலும் கூடுதலாக அவைக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், உறுப்பினர்கள் தங்கள் பிரச்சனைகளை அவைகளில் எழுப்புவதற்கு வாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் அப்போது குறிப்பிட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசினார்.

நாடாளுமன்றக் கூட்டம் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் பத்து நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்றும், முடிவு எடுக்கப்பட்டதும் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
13 முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன. குறிப்பாக முத்தலாக் மசோதா இதில் முக்கியமானது. அம்மசோதா மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 17-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக்கூட்டம், கடந்த 20 ஆண்டுகளில் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

128 சதவீதம் அவையின் நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமைந்ததாக நாடாளுமன்ற ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்திருக்கிறது.