சென்னை, ஜூலை 23: தமிழகத்தில் மேல் மட்டத்தில் நடைபெறும் ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட லோக் அயுக்தாவுக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் இன்று நீக்கியது.

ஊழலை தடுக்க லோக் அயுக்தா என்ற அமைப்பு மாநிலங்கள் தோறும் நியமிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதை அமைப்பதற்காக கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தேவதாஸ் தலைமையில் 4 பேர் கொண்ட லோக் அயுக்தா அமைக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் தமிழ்நாடு தேர்வாணைய குழுவின் ஓய்வு பெற்ற உறுப்பினர் எம்.ராஜாராம், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த அமைப்புக்கு நீதித்துறையை சாராதவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதம் எனக்கூறி மதுரையைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் லோக் அயுக்தாவுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் பிரமாண வாக்குமூலமும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதித்துறை சாராத உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.