பெங்களூர், ஜூலை 23: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் இன்று மாலைக்குள் வாக்கெடுப்புக்கு எடுத்து கொள்ளப்படும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து கடந்த 2 வார காலமாக அந்த மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்ப நிலைக்கு முடிவு ஏற்படும் என தெரிகிறது.

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம். காங்கிரஸ் கூட்டணி அரசு குமாரசாமி தலைமையில் நடந்து வந்தது. கூட்டணியைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அங்கு அரசியலில் குழப்பம் ஏற்பட்டது.

ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்களிடம் காங்கிரஸ்கட்சி நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ராஜினாமாவை விலக்கிக் கொள்ளப்போவதில்லை என அவர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியது.

இதற்கிடையே கடந்த வாரம் குமாரசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நீடித்து வந்த நிலையில் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிஜேபி கோரியது. முதலமைச்சர் குமாரசாமி மேலும் 2 நாட்கள் அவகாசம் கேட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கூடுதல் அவகாசம் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய சபாநாயகர் ரமேஷ்குமார், ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் காலஅவகாசம் கோரி இருந்தனர்.

இதற்கிடையே, 2 சுயேட்சை எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த உத்தரவிடக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர¢அபிஷேக் சிங்வி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதி அளித்தார்.இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சபாநாயகர் உறுதி அளித்துள்ள நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.