கொழும்பு, ஜூலை 23:  வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஆட்டத்துடன் மலிங்கா தனது ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளதாக இலங்கை கேப்டன் கருணாரத்னே தகவல் தெரிவித்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கான முதல் போட்டி வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்குபெறும் இலங்கையின் நட்சத்திர பவுலர் லசித் மலிங்கா, இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாராம். இந்த தகவலை இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே கொழும்புவில் நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், வங்கதேச அணியுடன் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியோடு ஓய்வு பெறுகிறேன் என்று மலிங்கா என்னிடம் சொன்னார். ஆனால் அணி தேர்வு குழுவிடம் அவர் என்ன சொன்னார் என்று தெரியாது என்றார். ஓய்வுக்குப்பிறகு, மலிங்கா ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது, நினைவுக்கூரத்தக்கது.