ராஸ் அல் காமியா, ஜூலை 23:  ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்நாட்டு அரசு ஒட்டக சாணத்தில் சிமெண்ட் தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இந்நாட்டில் வடக்குப் பகுதியில் உள்ள ராஸ் அல் காமியா என்ற இடத்தில் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஒட்டகங்களின் சாணத்தை சிமெண்ட் தயாரிக்க வழங்குகின்றனர். இதற்காக அரசே ஒட்டகச் சாண சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளது. அங்கு விவசாயிகள் சாணத்தை கொண்டு சேர்க்கிறார்கள். பின்னர், டன் கணக்கில் சேர்ந்த ஒட்டகச் சாணத்தை சிமெண்ட் ஆலையின் பிரம்மாண்ட பாய்லருக்குச் செல்கிறது. பாய்லரில் நிலக்கரியுடன் சேர்த்து அதிக வெப்பத்தில் (1400 டிகிரி செல்சியஸ்) சூடாக்கப்பட்டு சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.
முதலில் இந்த யோசனையை கழிவு மேலாண்மை முகாமை பரிந்துரைத்தபோது, எல்லோரும் சிரித்தார்களாம். சோதனை முறையில் அதை முயற்சித்துப் பார்த்தபோது, இரண்டு டன் ஒட்டகச் சாணத்தால் ஒரு டன் நிலக்கரி மிச்சமாவது தெரியவந்தது. தற்போது, தினமும் 50 டன் ஒட்டகச் சாணம் சிமெண்ட் தயாரிப்புக்கு பயன்படுகிறதாம்.

ஒட்டகத்தின் சாணம், குப்பையில் குவிவதைத் தடுப்பதுதான் இத்திட்டத்தின் பிரதான நோக்கம். 2021-ம் ஆண்டுக்குள் 75% ஒட்டகக் கழிவு குப்பையில் சேராதபடி வழிவகை செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசு இலக்கு வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஒட்டகமும் தினமும் 8 கிலோ சாணத்தை வெளியேற்றுகிறது என்பது கூடுதல் தகவல்.