எரிபொருளை சேமிக்க உதவும் மின்சார கார்

சென்னை

சென்னை, ஜூலை 24:இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மின்சாரத்தால் இயங்கும் காரை ஒரு தடவை சார்ஜ் செய்தால் 452 கி.மீ பயணம் செய்யலாம் என காரை தயாரித்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் துணை தலைவர் தத்தா கூறியுள்ளார்.

மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவன துணை தலைவர் தத்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: – மின்சாரத்தால் தயாரிக்கப்படும் இது போன்ற கார்கள் உலக நாடுகள் பலவற்றில் தயாரிக்கப்பட்டாலும், இந்தியாவில் தமிழகத்தில் தான் முதல் முறையாக ஹூண்டாய் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்து கொண்டு ஒப்பந்தத்தின்படி இந்த எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளோம். இதுவரை 125 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 3 மாதகால தயாரிக்கப்பட்டும். மேலும் கார்கள் புதிதாக பதிவு செய்யப்படுவதை பொறுத்து உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

இரவில் சார்ஜ் செய்தால் 452 கி.மீ தூரம் பயணிக்க முடியும். மேலும் மால்களில் இந்த கார்களை சார்ஜ் செய்ய ஸ்பெஷல் சார்ஜ்கள் வைக்க பேசி வருகிறோம். அதே போன்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். அதன்படி பெட்ரோல் பங்க்களிலும் ஸ்பெஷல் சார்ஜ் வைக்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போது எலெக்ட்ரிக் பொருட்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்ளது இதனை நாளை நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே போன்று தமிழக அரசின் சாலை வரியை குறைக்க கோரியுள்ளோம். அப்படி குறைக்கும் பட்சத்தில் காரின் விலையும் குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் காரை விட இந்த எலெக்ட்ரிக் காரில் 25 புதிய வகையான வசதிகள் செய்து, சொகுசு காராக வடிவமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 9.7 விநாடிகளில் 100கிமீ வேகத்தை எட்டும். காரின் விலை ரூ. 25 லட்சம், முதல் – 30 லட்சம், ஒருமுறை சார்ஜ் செய்தால் – 452 கிலோமீட்டர் பயணிக்க முடியும். வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்தில் சார்ஜ் செய்தால் 19 மணி நேரமாகும்.