பெங்களூர், ஜூலை 24: கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து இன்று நடைபெற்ற பிஜேபி எம்எல்ஏக்கள¢ கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக எடியூரப்பா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அவர் உரிமை கோருகிறார்.

கர்நாடக சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 99 ஓட்டுகளும், எதிராக 105 ஓட்டுகளும் விழுந்ததைத் தொடர்ந்து குமாரசாமி ஆட்சியை பறி கொடுத்துள்ளார்.கர்நாடக சட்டசபையில் மொத்தம் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 224. இதில் நேற்று நம்பிக்கை ஓட்டெ டுப்பு நடந்தபோது 20 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட வரவில்லை.
அவர்களில் 14 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த 14 பேரில் 12 பேர் அதிருப்தியாளர்களாக மாறி மும்பை ஓட்டலில் தங்கி இருந்தனர்.
3 பேர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள். 2 பேர் சுயேட்சைகள். பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வும் சபைக்கு வரவில்லை.

கடைசி நிமிடத்தில் கூட அவர் ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் 99 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதே சமயத்தில் எடியூரப்பா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக மாறி உள்ளனர். இதனால் அதன் பலம் 107 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் எடியூரப்பா ஈடுபட்டுள்ளார். முதல் நடவடிக்கையாக இன்று பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சட்டசபை பா.ஜனதா தலைவராக எடியூரப்பா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான ஆவணத்தில் பிஜேபி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கையெழுத்திடுவார்கள்.

அதன் பிறகு எடியூரப்பாவும், பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர்களும் கவர்னர் வஜுபாயை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள். இது குறித்து எடியூரப்பா கூறுகையில் பிஜேபி மேலிட முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றார்.நாளை நல்ல நாள் என்பதால் நாளையே எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடியூரப்பாவிடம் சட்டசபையில் மீண்டும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்டும்படி கவர்னர் கேட்டுக் கொள்வார். அதை ஏற்று எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் சட்டசபையில் கொண்டு வருவார். அதன் மீது விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடத்தப்படும்.

அந்த ஒட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்ற பிறகே அமைச்சரவையை அமைக்கும் பணியை அவர் மேற்கொள்வார் என்று தெரிய வந்துள்ளது.